பொலிஸ் மா அதிபரின் மனைவி கைது ; அம்பலமான பல அதிர்ச்சி தகவல்கள்
புதையல் தோண்டியமை தொடர்பாக, அனுராதபுர காவல்துறை அதிகாரிகளால் பிரதி காவல்துறை மா அதிபரின் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டபோது, பிரதி பொலிஸ் மா அதிபரும் அனுராதபுரத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்தில் பால் காணிக்கை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக கூறி, பிரதி பொலிஸ் மா அதிபர், மேலதிகாரிகளிடம் கடந்த 13 ஆம் திகதி அனுமதி பெற்றுள்ளார்.
மனைவியைக் காப்பாற்ற அழுத்தம்
பொலிஸ் துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதவியேற்ற விழாவில் பங்கேற்க நிச்சயமாக வருவேன் என்றும் அவர் தனது மேலதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
காலை 5 மணிக்கு காணிக்கை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டாலும், அது முடிந்து காலை 5.30 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்தாலும், குறைந்தது 3 மணி நேரத்திற்கும் மேலாகும்.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் துறை மா அதிபர் பதவியேற்ற விழா காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது. எனினும், காலை 7.30க்கு பொலிஸ் மா அதிபர் காவல் தலைமையகத்திற்கு வரும் போது குறித்த பிரதி பொலிஸ் மா அதிபரும் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால், பால் காணிக்கை செலுத்திய பிறகு, குறித்த நேரத்தில் அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு வர முடியுமா என்பது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், 14 ஆம் திகதி அதிகாலையில் அனுராதபுர பொலிஸாரால் அவரது மனைவி கைது செய்யப்பட்ட பின்னரே, அவர் காவல்துறை மா அதிபர் கடமைப் பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அத்துடன் தனது மனைவி உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட பிறகு, அனுராதபுர பொலிஸ் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தனது மனைவியைக் காப்பாற்ற அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.