மோட்டார் சைக்கிள் சோதனையின் போது மோதல் : நால்வர் வைத்தியசாலையில்
பாணந்துறையில் மோட்டார் சைக்கிளை சோதனை செய்ய சென்ற போது ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேச போக்குவரத்து உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேற்று பகல் 12.10 மணியளவில் பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் உள்ள போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்தனர்.
மொரட்டுவையில் இருந்து பாணந்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்த நிலையில், அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் கைது செய்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேரும் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.