சர்ச்சையை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பேரணிக்கு பொலிஸார் தடை!
கற்பிட்டியிலிருந்து அநுராதபுரம் வரை பயணிக்கவிருந்த மோட்டார்சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு மற்றும் நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்பட்டதால் குறித்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மோட்டார்சைக்கிள் கழகமொன்று மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கியதுடன், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, இந்த பேரணியை முன்னெடுக்கவிருந்தது.
மீரிகமயிலிருந்து கற்பிட்டி ஊடாக அநுராதபுரம் வரை மோட்டார்சைக்கிள் பேரணியை நடத்த அனுமதி கோரியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது நியாயமான கோரிக்கையாக இருந்ததால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணம் அறவிடப்பட்டதன் பின்னர் பேரணிக்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் சொகுசு வாகனங்கள், அதிவலு கொண்ட மோட்டார்சைக்கிள்கள் குளியாப்பிட்டியில் இருந்து கற்பிட்டிக்கு நேற்று பேரணியாக சென்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்பும் இதற்கு வழங்கப்பட்டிருந்தது.
அதேசமயம் இந்த வாகன பேரணிக்கு மாதம்பை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தளுவ சந்தியில் மீகெட்டுவத்தே சுமித்த தேரரும் வீதியை மறித்து தனது எதிர்ப்பை வௌிப்படுத்தினார். இதனையடுத்தே மோட்டார் சைக்கிள் பேரணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.