வவுணதீவு கிணற்றில் மீட்கப்பட்ட பெண்ணால் பொலிசார் குழப்பம்
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், நேற்று முன்தினம் தாந்தாமலை - நெல்லிகாடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
சம்பவம் குறித்த விசாரணைகளில் தற்போது புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்ட பெண் ஆரம்பத்தில் வழங்கிய தகவல்களுக்கும், இன்று சிகிச்சையின் பின்னர் வழங்கிய வாக்குமூலத்திற்கும் இடையே பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
தான் நகரில் இருந்து முச்சக்கர வண்டியில் வந்தபோது, தன்னுடன் வந்த மற்றொரு பெண் வழங்கிய குளிர்பானத்தை அருந்திய பின் சுயநினைவை இழந்ததாக அவர் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் முச்சக்கர வண்டியில் ஏறியதாகக் குறிப்பிட்ட இடங்களைச் சோதித்தபோது, அவரது கூற்றுகளில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி தற்போது அடையாளம் காணப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிருடன் மீட்கப்பட்ட பெண்ணை மற்றொரு பெண் பின்தொடர்ந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மர்மப் பெண்ணுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏதேனும் மயக்க மருந்து அல்லது போதைப்பொருள் வழங்கப்பட்டதா என்பதைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைகளை முன்னெடுக்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
தற்போது அந்தப் பெண்ணும், சில கிலோமீற்றர் தொலைவில் மீட்கப்பட்ட அவரது இரண்டரை வயதுக் குழந்தையும் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணின் உடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் இது குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.