சிறைக் கைதி ஹரக் கட்டாவிற்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவருக்கு கையடக்கத் தொலைபேசியை கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பழைய சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது “ஹரக் கட்டா”விடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள்
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தங்காலை பழைய சிறைச்சாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது “ஹரக் கட்டா”வுக்கு கையடக்கத் தொலைபேசியை கொடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.