பருத்தித்துறை மீன் விற்பனை சந்தை அதிரடி முடக்கம்!
பருத்தித்துறை நகரில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதையடுத்து தற்காலிக இடத்தில் இயங்கிய மீன் சந்தையை மூடுமாறு சுகாதாரத் தரப்பினரால் இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக பருத்தித்துறை நகரில் மேலும் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதையடுத்து பருத்தித்துறை நகர் கடந்த 14ஆம் திகதி இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரின் மத்தியில் இயங்கிவந்த மீன்சந்தையும் மூடப்பட்டுள்ளதனால் கிராமக்கோட்டு சந்திதிக்கு அருகாமையில் மீன் விற்பனை கடந்த தினங்களில் தற்காலிகமாக இடம்பெற்று வந்திருந்தது.
பருத்தித்துறை நகர வர்த்தகர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததை அடுத்து முடக்கப்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களது நடமாட்டங்களை மட்டுப்படுத்த சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்தே கிராமக்கோட்டு சந்தியில் தற்காலிகமாக இயங்கி வந்த மீன் சந்தையை மூடுவதற்கு பருத்தித்துறை சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனையில் ஈடுபட்ட அனைவரும் 14 நாட்கள் நிறைவடையும் வரை வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும், கொரோன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே மேற்கொண்டு நடவடிக்கை குறித்து அறியத்தரப்படும் எனவும் பருத்தித்துறை சுகாதாரத் தரப்பினரால் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்தார்.
பருத்தித்துறை நகர் கொரோனா கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.