அத்தியாவசிய தேவைகள்கூட இல்லாத கண்டி கலஹா மக்களின் அவலநிலை!
மலைநாட்டில் வாழ்ந்தாலும் குடிநீரை பெறுவதற்குகூட ஆயிரம் போராட்டங்கள் என்றும் , லயன்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால உயிரை கையில் பிடித்துக்கொண்டே வாழ்கின்றோம் எனவும் கண்டி கலஹா குறுப், அப்பர் கலஹா தோட்டத்தில் வாழும் மக்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.
கொட்டும் மழையிலும், சூறாவளிலும் தமது உயிரையே பணயம் வைத்து, அட்டைக்கடி, குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதலென சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்தவர்கள் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள். இன்றளவிலும் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு அவர்கள் பெரிதும் பங்களிப்பு செய்கின்றனர். கொரோனா நெருக்கடி காலத்திலும் அவர் உழைக்கின்றனர்.
ஆனால் அவர்களின் வாழ்வு இன்னும் மேம்படவில்லை என்பது கசப்பான உண்மை. கலஹா அப்பர் தோட்ட மக்களின் வாழ்வே இதற்கு சான்று என மலையக சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டமே அப்பர் கலஹாவாகும். நான்கு லயன் குடியிருப்புகள் உள்ளன. சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தேயிலை தொழில்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அவர்கள் வாழ்வு நகந்து செல்லும் நிலையில், குறிப்பிட்டு கூறுமளவுக்கு உப தொழில்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை. இந்நிலையில் தேயிலை மலைகள் காடுகளாகியுள்ளதுடன், மிருகங்களின் இருப்பிடமாக மாறியுள்ளதாகும் கூறும் பிரதேசவாசிகள், குடிநீர் வசதிகூட இல்லாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர்.
இன்றைய நவீன யுகத்திலும் அடிப்படைவசதிகள்கூட இன்றி பெருந்தோட்ட மக்கள் ‘வலி ’ சுமந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மலையகத்தில் அசுர வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக மார்தட்டுபவர்கள், நகரப் பகுதிகளை அண்டியுள்ள தோட்டங்களை விடுத்து, தூர இடங்களிலுள்ள தோட்டங்களுக்கு சென்றால், அங்குள்ள அவலக்காட்சிகளை காணலாம்.
அங்குள்ள மக்களுக்கு வைத்தியசாலை வசதி இல்லை. யாராவது தீவிர நோயால் பாதிக்கப்பட்டால் பேராதனை அல்லது கண்டிக்கு பலமைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேசவாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.







