மஹிந்தவின் வாழ்க்கை பயணத்தை திரைப்படமாக்க திட்டம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,
அனுர அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்குமே முயற்சித்துவருகின்றது.
ஆகையினால்தான் அரசாங்கம் உரிய தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தாம் விரும்பியவாறு தன்னிச்சையாகத் தீர்மானம் மேற்கொள்கிறது.
அதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் புலனாய்வுப்பிரிவை வலுவிழக்கச்செய்து, பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவின் உயர்பதவிகளுக்கு அரசியல் நியமனங்களை வழங்கி, அவர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகித்தமையினாலேயே அதன் பின்விளைவுகளையும் அனுபவிக்கவேண்டிய நிலையேற்பட்டது.
தற்போதைய அரசாங்கமும் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை தமக்கு அடிபணியச்செய்து, அவர்களைத் தாம் விரும்புவதுபோல் இயக்குவதற்கே முனைகிறது.
தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் அவர்களுக்கென தனித்த கொள்கை விஞ்ஞாபனமொன்றை வெளியிட்ட அரசாங்கம், தற்போது அதிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைத்திட்டத்தையே தொடர்ந்து முன்னெடுத்துச்செல்கிறதாகவும் நாமல் கூறினார்.
எனினு தமது கட்சி அவ்வாறு செயற்படவில்லை. நாம் முன்னரும், இப்போதும் மாறுபடாத ஒரே கொள்கையை அடிப்படையாகக்கொண்டு பயணிக்கிறோம் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.