IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த புதிய திட்டம்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு தென்னிந்தியாவின் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக நேற்று முதல் ஒருவாரத்துக்கு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொடர் இந்த மாதத்தில் மீண்டும் தொடங்கப்படுமாயின், மீதமுள்ள 16 போட்டிகளையும் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இடங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய சூழலில் போட்டிகளை விரைவாக மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கிறது.
போட்டித் தொடர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அணிகள் கலைந்து செல்லத் தொடங்கியதுடன், பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இன்றைய தினத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி இடைநிறுத்தம் நீடிக்கப்படுமாயின் வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றும் ஒப்பந்த வீரர்கள் மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் என அணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.