ரணிலுடன் உலங்கு வானூர்தியில் பிள்ளையான் கதை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பிள்ளையான் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது.
மட்டக்களப்புக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்து, ரணிலுடன், பிள்ளையானும் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு பயணம் செய்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் தனிப்பட்ட உரையாடகள் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் , அவை தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஒரு படம் அரசியலில் பல அர்த்தங்கள்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உலங்குவானூர்தியில் கொழும்பிற்கு பயணித்தார் என பதிவிடப்பட்டு வெளியாகிய ஒரு புகைப்படம் தற்போதைய அரசியலில் பல அர்த்தங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.
கொழும்பு வரை பயணமா அல்லது ரணிலுடன் தொடங்கிய தொடர் பயணமா? மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாக இருக்கும் பிள்ளையான் ஜனாதிபதி ரணிலுடன் உலங்கு வானூர்தியில் தனியாக கொழும்பிற்கு செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்களா? அல்லது போகும் வழியில் இறக்கி விட்டுப் போகலாம் என்று ஜனாதிபதி ரணில் பிள்ளையானை ஏற்றிச் சென்றாரா என்ற கேள்வி எழுகிறது?
அல்லது ரணிலுடன் தொடர்ந்து பயணிக்கும் நோக்கில் கொழும்பு வரை பிள்ளையான் பயணம் சென்றாரா? அல்லது முழு அதிகாரமும் ஜனாதிபதி ரணிலின் கையில் இருந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் மீது சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பிள்ளையானை தனது பொறிக்குள் சிக்கவைக்கும் நோக்கில் பிள்ளையானை குண்டுக் கட்டாக உலங்கு வானூர்தியில் தூக்கி கொண்டு போன போது இந்த படம் எடுக்கப்பட்டதா?
அதுவாக இருக்கலாம் அல்லது இதுவாக இருக்கலாம் என மட்டக்களப்பில் பலரும் பத்துமாக பேசினாலும். இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பல இரகசிய நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஊடாக குறித்த படம் தற்போது வெளியிடப்பட்டதன் நோக்கம் குறித்து ஆழமாக ஆராயவேண்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய நண்பர், அதுவும் இஸ்லாமிய தீவிரவாதம் ஒன்றை செயற்படுத்தி இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயற்பட்ட ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய பங்காளி என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு தமிழ், முஸ்லீம் தரப்புக்களின் எதிரியாக காட்டப்பட்ட பிள்ளையான் தரப்பால் வெளியிடப்பட்ட இந்த படத்தால்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான வாக்குகளை ஒரு படத்தை போட்டு இல்லாமல் செய்துள்ளார்களா? என்ற கேள்விகளும் எழுகிறது?
எது எப்படி இருந்தாலும் பிள்ளையானால் எதிர்வரும் 23 ம் திகதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படும் புத்தகத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை