ஜீவந்த பீரிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் முன்னனி செயற்பாட்டாளராக அறியப்படும், அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (1) குறித்த மனுவானது உயர் நீதிமன்றில் நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர அகையோர் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது.
கோரிக்கை
இதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரனி ரியன்சி அர்சகுலரத்னவின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் மனுவை மீளப் பெற அனுமதியலித்தது.
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் தாக்கல்ச் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முப்படை தளபதிகள், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
எவ்வித நியாயமான காரணங்கள், விடயங்களும் இன்றி, பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், வழக்கு விசாரணை செய்து தீர்ப்பறிவிக்கும் வரையில் தான் கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் மனுவூடாக கோரப்பட்டிருந்தது.