புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்
புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து, வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றை செய்வது புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தான்.
புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் சிறப்புடையது என்றாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகளை செய்வது சிறப்பானதாகும்.
இதனால் பெருமாளின் அருளுடன், செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, முன்னேற்றம், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் மட்டுமே பெருமாளின் அருள் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.
முழுமையான பலன் பெற புரட்டாசியில் எவ்வாறு பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
வழிபாட்டு முறை
பெருமாளை குலதெய்வமாக கொண்டவர்கள், பெருமாளிடம் முக்கியமான வேண்டுதல் வைத்திருப்பவர்கள், பெருமாளின் தீவிர பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் வீடுகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. அப்படி மாவிளக்கு ஏற்றுபவர்கள் எந்த சனிக்கிழமையில் வேண்டுமானாலும் மாவிளக்கு வைத்து வழிபடலாம் என நினைத்து செய்யக் கூடாது.
இது நமக்கு தெய்வீக அருளை தருவதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளையே தரும். மாவிளக்கு வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட நாள், கணக்கு இருக்கிறது. இந்த முறைகளை தெரிந்து கொண்டு மாவிளக்கு இட்டு வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் முன்னோர்களை வழிபடுவதற்கான மகாளய பட்சமும் இணைந்து வரும். இந்த ஆண்டு மகாளய பக்சத்தில் முதல் இரண்டு சனிக்கிழமைகளும், நவராத்திரி சமயத்தில் கடைசி 2 சனிக்கிழமைகளும் வருகிறது. மகாளய பக்ஷத்தில் மாவிளக்கு போட கூடாது. மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களையே பிரதானமாக கருதி வழிபட வேண்டும். முன்னோர்களை வழிபட்ட பிறகு தான், வழக்கமான தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.
அதே சமயம், தெய்வங்களுக்குரிய முக்கிய விரதங்கள் இருப்பது, வழிபாடுகளை செய்வது ஆகியவற்றை செய்யக் கூடாது என்ற முறை உள்ளது. செப்டம்பர் 18ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை வரை மகாளய பட்சம் உள்ளது. இதனால் அதற்கு பிறகு தான் பெருமாளுக்குரிய வழிபாட்டினை நாம் மேற்கொள்ள வேண்டும். நவராத்திரி காலத்தில் மாவிளக்கு போடுவதால் தவறில்லை.
இந்த ஆண்டு புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது. இவற்றில் முதல் சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இட்டு வழிபாடு செய்ய வேண்டும். இரண்டாவது சனிக்கிழமையானது ஏகாதசி உடன் இணைந்து வருவதால் அந்த நாளில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, துளசி கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மூன்றாவது சனிக்கிழமை நவராத்திரி காலத்தில் வருகிறது.
அதனால் அந்த நாளில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து, வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் அருளை பெற்றாலே அவர்களுக்கு பெருமாளின் அருள் தானாக கிடைத்து விடும். அதே போல் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரத்துடனும், அம்பிகைக்குரிய விஜயதசமி திருநாளுடனும் இணைந்து வருகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.