விபத்துக்களை ஏற்படுத்தி பணம் பெறும் நபர்கள்; பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
கொழும்பில் வேண்டுமென்றே வாகன விபத்துக்களை ஏற்படுத்தி பணம் பறிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தவகையில் வேண்டுமென்றே தனது முச்சக்கர வண்டியை மற்ற வாகனங்களுடன் மோத வைத்து கப்பம் பெற்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி நுகேகொடை மற்றும் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வாகனத்தை செலுத்தி வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேவேளை சந்தேக நபர் இரண்டு மாதங்களுக்குள் 15 சாரதிகளிடம் இருந்து 300,000 ரூபாவை விடவும் அதிக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.