அலரி மாளிகை பொருட்களை அள்ளிச்சென்றவர் சிக்கினார்!
ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக்களை அபகரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபரின் வீட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பித்தளை சுவர் அலங்காரங்கள், கமரா உபகரணங்கள் மற்றும் கமரா பை ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குழுவினருடன் அலரிமாளிகைக்குள் திருட்டு
60 வயதுடைய நபர் செயற்பாட்டாளர் என்ற போர்வையில் மற்றுமொரு குழுவினருடன் அலரிமாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள ஊடக அலுவலகத்தில் இருந்த சுவர் அலங்காரங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அலரிமாளிகையின் ஊடகப் பிரிவில் இருந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
அதனை தொடர்ந்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சொத்துக்களை திருடிய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .