குவைத்திலிருந்து நாயின் உயிரை காப்பாற்றி இலங்கைக்கு கொண்டுவந்த நபர்!
குவைத்தில் பிறந்த நாய் ஒன்றை, பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் உயிரை காப்பாற்றி இலங்கைக்கு கொண்டு வந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் (28-10-2022) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குவைத்தில் வீதியோரத்தில் வாழ்ந்த நாயே, இந்த ‘ரொஸ்கோ”.
மிகுந்த குளிர்காலம் நிலவிய சந்தர்ப்பத்தில், வீதியில் தனித்திருந்த இந்த நாயை, அங்கு வசிக்கும் இலங்கை தம்பதிகளாக தச்ஷி – பாலகும்புர ஆகியோர் தமது தொடர்மாடி குடியிருப்புக்கு கொண்டு சென்று வளர்த்துள்ளனர்.
இருப்பினும், குவைட் நாட்டின் சட்டம் தொடர்பில் அவர்கள் அன்று அறிந்திராத நிலையிலேயே, இந்த நாயை மிகுந்த பாசத்துடன் வளர்க்க ஆரம்பிக்கின்றார்கள்.
வீட்டிற்கு கொண்டு சென்ற இந்த நாய்க்கு, ”ரொஸ்கோ” என பெயர் சூட்டி, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், ”ரொஸ்கோ” குரைக்க ஆரம்பித்த நிலையில், தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஏனையோர், இது தொடர்பில் தொடர்மாடி குடியிருப்பு உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த வீட்டிற்கு வருகைத் தந்த தொடர்மாடி குடியிருப்பின் உரிமையாளர், ”ரொஸ்கோ”வை அழைத்து செல்லுமாறு காலக்கேடு விதிக்கின்றார்.
20 நாட்களின் ”ரொஸ்கோ” அழைத்து செல்லப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால், தாம் அதனை அழைத்து செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அழைத்து செல்லப்படுமாக இருந்தால், அந்த நாட்டு பிரஜைகள் ”ரொஸ்கோ”வை கொலை செய்திருப்பார்கள் என இலங்கைக்கு ரொஸ்கோவை அழைத்து வந்த கலாநிதி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார்.
குவைட் நாட்டின் பிரஜைகளுக்கு விரும்பியவாறு மிருகங்களை வளர்க்க முடியும் என்பதுடன், அந்த நாட்டு பிரஜை இல்லாத ஒருவருக்கு மிருகங்களை வளர்க்க முடியாது என்பதே அந்த நாட்டின் சட்டமாக காணப்படுகின்றது.
இதையடுத்து, ”எமது குழந்தையை காப்பாற்றி தருமாறு” அதன் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவை அவதானித்த இலங்கை பெண்ணான கலாநிதி விஷாகா சூரியபண்டார, இது தொடர்பில் உரிமையாளருடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், சுமார் 13 லட்சம் ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டு, ”ரொஸ்கோ”வை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார் கலாநிதி விஷாகா சூரியபண்டார.
”ரொஸ்கோ”வை நாட்டிற்கு கொண்டு வர பலர் பல்வேறு விதத்தில் உதவிகளை புரிந்ததாக கலாநிதி விஷாகா சூரியபண்டார தெரிவிக்கின்றார்.
100 ரூபா முதல் பெருந்தொகையான பணம் வரை பலர் ”ரொஸ்கோ”வை காப்பாற்ற உதவி புரிந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், ”ரொஸ்கோ” கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தது.