திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் போதைப்பொருட்களுடன் கைது
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை மற்றும் சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வல்பொல லாலா என அழைக்கப்படும் 38 வயதுடைய சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வல்பொல சந்தியில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
கைது செய்யப்படும் போது, அவரிடமிருந்து 10 கிராமுக்கு மேற்பட்ட “ஐஸ்” போதைப்பொருளும், தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த தராசு மாலபே பகுதியில் உள்ள சில்லறை கடை ஒன்றில் இருந்து திருடப்பட்டதாகவும், அதை மீண்டும் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வாள்கள் உட்பட பல கூர்மையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் மேலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் நீர் மோட்டார்கள் உட்பட பல பொருட்களை திருடி, ஹினட்டியான கும்புரா வீதியில் வசிக்கும் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த பொருட்கள் மீட்கப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அவிசாவளை வீதியில் உள்ள ஹார்ட்வேர் கடை ஒன்றில் இருந்து இரும்புப் பொருட்களை திருடியதுடன், முல்லேரியாவ –அவிசாவளை வீதியில் ரூ. 30,000 பணத்தை கொள்ளையடித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (24) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.