திருகோணமலையில் அபாயகரமான பொருளுடன் சிக்கிய நபர்!
திருகோணமலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று (22-12-2022) வியாழக்கிழமை மாலை வேளையில் அதி சக்தி வாய்ந்த வெடிமருந்து தூள் 1500 கிராம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வெடிமருந்துக்கு பயன்படுத்தப்படும் 21 அடி நீளமான வயர் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று விசேட புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுதியபோதே வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈச்சிலம்பற்று பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.