வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் மாயம்
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக நீர்கொழும்பு கட்டுவ, புவக்வத்த பிரதேசத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக சிலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களுடைய வீடுகளில் தங்கி உள்ளனர்.
பலத்த மழை பெய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் தெப்பா எல பெருக்கெடுத்து தங்களது வீடுகளுக்குள் வெள்ளம் வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று மாலை 6.30 மணி அளவில் நீர்கொழும்பு பெரிய முல்லை, நூர் மத்ரஸா ஒழுங்கையில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
முஹம்மத் சலீம் மன்சூர் என்ற 59 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை தேடும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.