தனியார் துறையினருக்கு உர இறக்குமதிக்கு அனுமதி!
நாட்டில் தற்போது காணப்படுகின்ற உர தட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டு தனியார் துறையினருக்கு இரசாயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
அதற்கமைய இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் , இரசாயன உர பாவனைக்காக அரசாங்கத்தினால் எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற போது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பசுமை விவசாயத்தினை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரசாயன உர இறக்குமதியை தடை செய்து கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்த தீர்மானத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் , சேதன உரத்தினைப் பயன்படுத்தி 6 இலட்சத்து 50 000 ஹெக்டயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் இரசாயன உர இறக்குமதிக்காக தடை நீக்கி அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று முதல் தனியார் துறையினருக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையின் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என தெரிவித்த அமைச்சர், இரசாயன உரத்தினை உபயோகிப்பவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.
உர தட்டுப்பாடு மாத்திரமின்றி அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பல பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில், ஏற்பட்ட உர தட்டுப்பாட்டினால் பிரபாகரன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விடவும் தனக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்த விவசாய அமைச்சர், அரசாங்கத்திலுள்ளவர்கள் கூட இந்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கவில்லை என்றும், எனினும் அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.