கோட்டாவிற்கு ஆதரவான குழுவினரை துரத்தியடித்த மக்கள்! பதற்றமான சூழல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினரும் இன்னும் சில குழுவினரும் இணைந்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினர் நின்றிருந்த பக்கத்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனால், அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர் என அறியமுடிகின்றது.
மேலும் இந்த கல்வீச்சு தாக்குதல்களில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.


