மக்களே அவதானம்; களத்தில் விசேட பொலிஸ் குழு
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் கம்பளையைச் சேர்ந்த 64 பேரும் கண்டியை சேர்ந்த 61 நபர்களும் உள்ளடங்குகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 46,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 14 இடங்களில் 3,337 வாகனங்களும் அவற்றில் பயணித்த பயணித்த 6,549 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன்போது அநாவசியமாக மாகாண எல்லையைக் கடக்க முற்பட்ட 172 நபர்கள் அவர்கள் பயணித்த 75 வாகனங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் விருந்துபசாரங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.