ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பொங்கி எழும் மக்கள்; வெடிக்கும் போராட்டங்கள்!
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி நேற்றிரவு மிரிஹானையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் கலவரமாகியதில் பலர் காயமடைந்ததுடன், பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றும் நாடளாவிய ரீதியில் அங்கங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக கோசமெசுப்பியவர்கள் மீது செருப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் நுவரெலியாவிலும் பெருந்திரளான மக்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டதால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
அங்கிருந்து நுவரெலியாவில் இருந்து கிரகரி லேக் பார்க் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்று நுவரெலியா - பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுவருவது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.






