இலங்கை போராட்டத்தில் கவனத்தை ஈர்த்த புகைப்படம்!
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ள இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் 'தமிழர், முஸ்லிம்களுக்காக நான் பேசவில்லை, இன்று எனக்காக பேச எவரும் இல்லை' என எழுதியிருந்த பதாகை சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

ஏராளமான ஈழத் தமிழர்கள், வாழ வழியின்றி கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன. கடந்த 31 ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனை தொடர்ந்து நேற்றிரவு இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் கொழும்புவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை.
பொருளாதார பலம் இருப்பவர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் குவிந்து இருக்கும் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் குவித்து வருகின்றனர். இதனால் அனைத்தும் வேக வேகமாக தீர்ந்து வருகின்றன.
அதே நேரம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பணம் இன்றி அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியில் வாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்படுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கொழும்புவில் போராட்டம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இன்று முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்து இருக்கின்றன. நேற்றைய தினமும் இலங்கையில் ஏராளமான மக்கள் பதாகைகளை ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்களை கடந்து பொதுமக்கள், பெண்கள், முதியவர்களும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி இருப்பதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது தடுமாறி வருகிறது.
கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து பிரிவுகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் நேற்றைய போராட்டத்தில் ஒருவர் பதாகை ஏந்தி நிற்கும் படம் வைரலாகி வருகிறது. அதில், "முதலில் அவர்கள் தமிழர்களை குறிவைத்தார்கள். அப்போது நான் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் தமிழர் இல்லை. பின்னர் அவர்கள் இஸ்லாமியர்களை குறிவைத்தார்கள்.
அப்போதும் நான் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் இஸ்லாமியர் இல்லை. இப்போது என்னை குறிவைக்கிறார்கள். ஆனால், தற்போது எனக்காக பேச எவரும் இல்லை." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.