யாழ்.மக்கள் பயப்படத் தேவையில்லை... பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள்!
யாழ்.மக்கள் இனி பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரில் புத்தாண்டிற்கு முதல் இரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரத்தில் யாழ்ப்பாண நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் 4 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். 2 சம்பவங்களையும் தொடர்பில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம்.
இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.
இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம்.
குறித்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக்கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.