மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்; பெரும் ஆர்ப்பாட்டம்; தடையேற்படுத்திய பொலிஸார்
மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு சம்பவத்த்துக்கு நீதிகோரி இன்று (27) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது. இதன்போது, காவல்துறையினரால் மாவட்ட செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாதவாறு பேருந்துகளைக் குறுக்கே நிறுத்தியும், பிரதான வாயிலை மூடியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாவட்ட செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட பொதுமக்கள்
தடைகளைத் தாண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட பொதுமக்கள், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது இனிவரும் காலங்களில் இவ்வாறான கொடூரங்கள் நிகழாத வகையில் அமைய வேண்டும் என கோரினர்.
இந்தப் போராட்டத்தின் போது ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மனிதாபிமானமற்ற இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதன்போது ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு பெண்ணின் உடலம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அதியுயர் விலை கொண்ட மருத்துவப் பொருட்களை காவல்துறையினர் நேற்று நள்ளிரவு கைப்பற்றியுள்ளனர்.

சத்திரசிகிச்சைகளின் போது நினைவிழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் வீரியம் மிக்க இந்த மருந்துகள் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யுவதி தற்போது மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்ட யுவதிக்கு விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், மீட்கப்பட்ட பெண்ணின் உடலம் மீதான பிரேத பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.