நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்ட மக்கள்!
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் மக்கள், குறிப்பாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை இலக்கு வைத்தும், அவர்களின் வீடுகளுக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, ஜனக பண்டார தென்னக்கோன், காஞ்சன விஜேசேகர, நிமல் லான்சா, ரோஹித அபேகுணவர்தன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே மக்கள் பெருமளவில் குவிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர்.
இதேவேளை, களுத்துறையில் அமைந்துள்ள ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் தங்காலை கால்டன் ஹவுஸ் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் யாழில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னாலும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.