எந்த வேலையும் இல்லை... எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்கள் செய்யும் செயல்!
புத்தளத்தில் டீசலுக்கும், பெற்றோலுக்கும் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
புத்தளத்தின் ஆராச்சிக்கட்டுவ, ஆனவிழுந்தாவ, புளிச்சாக்குளம், முந்தல், மதுரங்குளி, கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “டீசல் இல்லை”, ” பெற்றோல் இல்லை” எனும் வாசகங்களே தொங்கவிடப்பட்டுள்ளன.
மேலும்,சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இரவு,பகலாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு எரிபொருட்கள் இன்மையால், எந்த வேலையும் இல்லாமல் அங்கு பணியாற்றும் ஊழியர்களை கொண்டு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் இயந்திரங்கள் என்பன சுத்தம் செய்யப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
எவ்வாறாயினும், டீசல் வரும் என்ற நம்பிக்கையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக டீசல் பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் வீதியோரம் இரவு, பகலாக தரித்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்சன் 95 பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதுடன், புத்தளம், மதுரங்குளி மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் இன்று மாலை பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மூதூர் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (18) பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள்கள் நீண்ட வரிசையில் கடும் வெயிலுக்கும் மத்தியில் காத்திருந்து பெற்றோலை பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இதன்போது மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய்க்கும் , முச்சக்கர வண்டிகளுக்கும் 1500 ரூபாய்க்குமென மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
குறித்த மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்கள் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.