ஊழியர்கள் போராட்டம்; ரயிலில் இலவசமாக பயணம் செய்த பயணிகள்!
நானுஓயா ரயிலில் பயணச் சீட்டின்றி பயணிகள் இலவசப் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இடமாற்றங்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் பழுதடைந்த ரயில் பெட்டிகளைச் சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராட்டத்தில் புகையிரத நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் முதல் கட்டமாக பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி பயணச்சீட்டு வழங்குவதையும் தவிர்த்து புகையிரத நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று நானுஓயா ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு விநியோகிக்கும் பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக நானுஓயா ரயில் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்தவர்கள் பயணச் சீட்டு இன்றி இலவசமாக பயணம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினா் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.