வரி விதிக்கும் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!
2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரியை விதிக்கும் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் மேலதிக வரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி 2000 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 25 சதவீத மேலதிக வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்தது.
அதேவேளை ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25 சதவீத மேலதிக வரி தொடர்பான குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.
இதனை அடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன. எனினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.
அதேவேளை மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.