எக்ஸ்பிரஸ் பேர்ள் நஷ்டஈடு ; பகிரப்படும் விதம் தொடர்பில் நாடாளுமன்றக் குழு அவதானம்
2021ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ பற்றி தகுந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) என்ற இரசாயனக் கப்பல் விபத்தால் கடல் சுற்றுச்சூழலுக்கும், கடற்றொழிலுக்கும் ஏற்பட்ட பேரழிவின் பின்னணியின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஏற்கனவே கிடைக்கப்பெற்ற நஷ்ட ஈட்டின் அளவு, இதில் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை, கடலோரப் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் தற்போது மீதமுள்ள பணத்தின் அளவு குறித்து விரிவான அறிக்கையைத் தம்மிடம் வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ரூபா 293 மில்லியன் தொகை கடற்றொழில் துறையினருக்கு இன்னமும் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக் காட்டினர்.
அதன்படி, கடற்றொழிலாளர்களுக்காகப் பெறப்பட்ட தொகையைச் செலுத்தாதது குறித்து குழு அதிருப்தி தெரிவித்ததுடன், சில கடற்றொழிலாளர்கள் வெளிநாடு சென்றிருந்ததாலும், உரிய இழப்பீட்டைப் பெற வேண்டிய நபர் முன்வராததாலும், இந்த இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும் வருகை தந்தவர்களிடம் குழு கேட்டறிந்து கொண்டது.
அத்துடன், குறித்த கப்பலின் உரிமையாளரினால் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல் அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய குழு, இது விடயத்தில் சகல தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி சரியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தது.
அத்துடன், இது விரைவான தீர்வைக் காண்பதில் காணப்படும் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் இந்தக் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு முழு இழப்பீட்டை வசூலிக்கத் தேவையான அனைத்துத் திட்டங்களிலும் குழு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக் காட்டினார்.