முடங்கவுள்ள கொழும்பு நகரம்; அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!
எதிர்வரும் 16ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொவிட் தொற்று மேலும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளமையினால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவிற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அரசாங்கத்துடன் இணைந்து, நாட்டில் வைரஸ் பரவலை தடுப்பதே எதிர்கட்சியின் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
மக்கள் இவ்வாறு ஒன்று திரளும் பட்சத்தில், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு, புதிய வைரஸ் அலைகள் ஏற்படும் என சுகாதார பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடுவதை நீதிமன்ற உத்தரவை பெற்று தாம் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.