கடற்றொழிலில் சவால்களை எதிர்கொள்ளும் பள்ளிமுனை மீனவர்கள்
மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக கிராம மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகளை இழுத்துச் செல்லும் ஓடையில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவு படுத்தப் பட்டால் மாத்திரமே மீனவர்கள் எவ்வித தடங்கலும் இன்றி தமது படகுகளையும் ஏனைய மீன்பிடி உபகரணங்களையும் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிமுனை கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறி கடந்த காலங்களில் ஜனாதிபதி,கடல் தொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினைக் குறித்து தற்போதைய கடல் தொழில் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது குறித்த ஓடையில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் நீண்ட நாட்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் பள்ளி முனையில் உள்ள மீனவ குடும்பங்கள் தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளிமுனை மீனவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் சுமார் 4 மாதங்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக பள்ளிமுனை பங்குத்தந்தை தெரிவித்தார்.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய தரப்பினர் குறித்த ஓடையை தோண்டி விரிவுபடுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.