ஜனாதிபதி அநுரவுக்கு பாகிஸ்தான் அரசின் புகழாரம் ; ஒரே வார்த்தையால் கிடைத்த பெருமை
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் சுமுகமாக நடைபெறுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணம் எனக் கூறி பாகிஸ்தான் அரசு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைச்சர் மொஹ்சின் நக்வி, இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

இனி எந்தப் பிரச்சினையும் இல்லை..
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது குறித்து பாகிஸ்தான் தயக்கம் காட்டிய நிலையில், ஜனாதிபதி அனுரகுமார பாகிஸ்தான் பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அந்தத் தீர்மானம் மாறியதாக நக்வி தெரிவித்தார்.
"ஜனாதிபதி பேசிவிட்டார், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் விளையாட வேண்டும்" என பாகிஸ்தான் பிரதமர் தன்னிடம் கூறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
"உங்களால் தான் இந்தப் போட்டி சாத்தியமானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்களை இந்தப் போட்டி மகிழ்வித்துள்ளது. நீங்கள்தான் இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்" என நக்வி ஜனாதிபதியைப் பாராட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார டித்வா சூறாவளி போன்ற இக்கட்டான காலப்பகுதிகளில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.