53 சிறுவர்களை ஆய்வு செய்ததில் வெளியான பகீர் தகவல்!
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 53 சிறுவர்களை ஆய்வு செய்ததில், அவர்களில் 20 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா, இது மிகவும் கவலையளிப்பதாகவும், ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரங்களைப் பெறத் தவறியமையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
காபோஹைதரேட், புரதம், கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் வைத்தியசாலையில் 10% சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களின் உணவில் பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்ற ஏற்றுமதி பொருட்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய வைத்தியர் பால், அரிசி, காய்கறிகள் மற்றும் கீரைகள் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் என அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு தாய்பாலை மாத்திரமே கொடுக்க வேண்டுமென்பதோடு, இரண்டு வயதை அடையும் வரை தாய்ப்பால் சில பெற்றோரால் வழங்கப்பட்டாலும் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்ப்பதற்கு தாய்ப்பால் மாத்திரம் போதாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள வைத்தியர், ஆரோக்கியமான தாயால் மாத்திரமே குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.