ஆபத்தான நபர்களான கெஹெல்பத்தர மற்றும் செவ்வந்தி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை
நாட்டில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களான கேஹெல்பத்தர பத்மே மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகியோரை அரச பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துவதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதிபதி அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் அனுமதி கோரியுள்ளது.
கனேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளைக் கொண்ட CD ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குரல் பகுப்பாய்வு
இதனை ஏற்கனவே அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தக் குரல் பதிவில் உள்ள குரலை பரிசோதனை செய்வதற்காக, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 15ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் 18ஆவது சந்தேகநபரான கேஹெல்பத்தர பத்மே ஆகியோரைப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப வேண்டியுள்ளது.
இதனால், அதற்காக நீதிமன்றத்தின் அனுமதி கோருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்தது. மேலும், கேஹெல்பத்தர பத்மேவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி தொடர்பான தடயவியல் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது.
தடயவியல் பரிசோதனைகள்
அதற்கமைய இந்தக் குற்றத்தை செய்வதற்கு தீட்டப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் பின்னரான நடத்தை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் மட்டும் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அத்துடன், ஏனைய சந்தேகநபர்கள் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.