தமிழர் பகுதிகளில் தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் நஞ்சுத் தன்மைகொண்டவையாக மாற்றமடைவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2024-02-08 அன்று மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் இரசாயனத் தன்மை கொண்டவையாக மாற்றமடைவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அறுவடைக்கு பின்னரான தொழில் நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் வீதி, பரந்தன் முல்லைத்தீவு வீதி, புளியங்குளம் நெடுங்கேணி வீதியென வடக்கின் பெரும்பாலான பிரதான வீதிகளில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவது என்பது பலரின் விமர்சனத்திற்கும் சிலரின் பரிதாபத்திற்குமான விடயமாக மாறிவிட்டது.
இது தொடர்பிலே கிளிநொச்சி மாவட்ட கலந்துரையாடலில் வீதிகளில் உலரவிடும் நெல் இரசாயனத் தன்மை கொண்டவையாக மாற்றமடைவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாய அறுவடைக்கு பிந்திய தொழில் நுட்ப நிறுவனம் குறிப்பிட்டமை தொடர்பிலும் அங்கே காணப்படும் நெருக்கடிகள் தொடரபாகவும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் மு.சிவமோகனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
விவசாயிகள் இன்று விவசாயம் புரிவதென்பது ஓர் தாய் குழந்தை பிரசவிப்பதற்கு நிகராகிவிட்டது.
அந்தளவு கஸ்ர துன்பங்களைத் தாண்டியே விவசாயத்தில் ஈடுபடவேண்டிய நிலையில் போதிய விளைச்சல் இன்றி அறுவடை செய்த நெல்லைக்கூட பாதுகாப்பதற்கு அவை அதிக ஈரப்பதங்களுடன் காணப்படுகின்றது.
இதனால் அவை அனைத்தையும் உடனடியாக உலரவிட வேண்டிய தேவை உள்ளது. அதுமட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்திலே காலபோகத்தில் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் விதைக்கபடுகின்றது இவை வெறும் 20 நாள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்.
அக் காலப்பகுதியில் அனைவரும் நெல்லை உலர விட்டே ஆக வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விவசாய அமைப்புக்களிடம் உள்ள காய்தளத்தில் இட வசதி இன்மையாலுமே விவசாயிகள் விதிக்கு வருகின்றனர்.
இருந்தபோதும் அவை போக்குவரத்திற்கு சில இடையூறாக இருப்பதனை நாம் மறுக்கவில்லை அதனால் போதிய தளவசதி ஏற்படுத்தும் வரையிலுமே இந்த நெருக்கடி காணப்படுகின்றது என்றார்.
இதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மாவட்ட அரச அதிபருக்கு வீதியில் நெல் உலர விடுவதனால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எழுத்திலே கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு பொது அமைப்புக்கள், பிரயாணிகள், விவசாயிகள் கூறும் கருத்து தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரான திருமதி.ரூபவதி கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
இவ் விடயம் தொடர்பில் மாவட்ட கூட்டத்தில் விவாதித்தவேளையில் அறுவடைக்கு பிந்திய தொழில் நுட்ப நிறுவனம், மாவட்ட விவசாய ஆராச்சி நிறுவனம் உட்பட பலரும் வீதியில் நெல் உலர விடுவதனால் ஏற்படும் அபாயத்தை எடுத்துக் கூறியதோடு நெல் இரசாயனத் தாக்கத்திற்கு உட்படுகின்றது என்பதனை தெளிவாக கூறினர்.
தளத்தில் 3 தினங்கள் உலரவிடவேண்டிய நெல் தார்படுக்கை வீதிகளானால் ஒரு நாளில் உலர்வதே அதிக தாக்கம்தான். தார்படுக்கை வீதிகள ஆபத்து என்பதன் காரணமாகவே மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நெல் உலரவிடும் தளங்கள் அனைத்தும் சீமேந்தினால் மட்டும் அமைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 100ற்கும் மேற்பட்ட விவசாய அமைப்புக்கள் உண்டு அதில் 80ற்கும் மேற்பட்ட அமைப்புகளிடம் உலரவிடும் தளங்கள் கைவசம் உள்ளது.
அவற்றிலர ஒரே தடவையில் 70 மூடை நெல் உலரவிட முடியும். இவை தாண்டி பச்சை நெல்லாகவே பல தனியார் கொள்வனவு செய்வதோடு நெல் உலரவிடும் 3 இயந்திரங்களும் மாவட்டத்தில் உள்ளது.
இதனால விவசாயிகள் தனியான இடத்தை பயன்படுத்த வேண்டுமே அன்றி வீதிகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு வீதகளில் நெல் உலரவிட்டதன் விளைவாகவே 2023 ஆம் ஆண்டு 3 உயிர்கள் பரிதாபகரமாக இழக்கப்பட்டன.
இதேநேரம் தளம் இல்லை என விவசாயிகள் கூறமுடியாது போதாது என்பது உண்மைதான் அவற்றினையும் அடுத்து வரும் வருடங்களில் நிறைவு செய்ய முயற்சிக்கலாம்.
இதேநேரம் அமைத்துக்கொடுத்த தளங்களில் பல பயன்படுத்தப்படாமல் உள்ளதனையும் நாம் கண்ணுற்றுள்ளோம் என்றார்.
இதேநேரம் ஏ32 வீதி மற்றும் பரந்தன் முல்லைத்தீவு வீதியிலேயே அதிக நெல் உலர விடுவதாகவும் காலபோகத்தில் அதிக நெல் என்பதனால் தளம்போதாது எனக் கூறும் விவசாயிகள் சிறுபோகத்தில் 30 ஆயிரம் ஏக்கர் விதைக்கும்போதும் வீதிகளிலேயே உலரவிடுகின்றனர்.
இது விவசாயிகள் வெறுமனே தமது சுயநலத்தை மட்டுதே கருதுவதாகவே பார்க்கின்றேன் என விசுவமடு தொட்டியடியில் பேரூந்து வைத்திருக்கும் சிறிரங்கன் தெரிவிக்கின்றார்.