ஒரே நாளில் இலங்கையில் கைதான 900ற்க்கும் மேற்பட்டோர்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், வியாழக்கிழமை (26) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 934 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை
இதேவேளை, 934 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 9 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோகிராம் 605 கிராம் ஹெரோயின், 02 கிலோகிராம் 131 கிராம் ஐஸ், 565 கிராம் கொக்கெய்ன், 818 கிராம் கஞ்சா, 3,930 கஞ்சா செடிகள், 10 கிலோகிராம் 476 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 199 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 403 போதை மாத்திரைகள், 268 கிராம் மதனமோதகம் மற்றும் ஒரு கிலோகிராம் 399 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.