மன்னாரில் திடீரென பற்றி எரிந்த 500-க்கும் மேற்பட்ட கற்பகதரு மரங்கள்; விசமிகள் செயலா?
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்தில், தனிநபா் ஒருவருக்குச் சொந்தமான பனைத் தோப்பில் செவ்வாய்க்கிழமை (31) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது அருகில் உள்ள வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைக்கும் பணி
தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டனர்.
அத்துடன், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கிராம மக்களும் பாரிய போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று மாலை 4 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தமிழர் பகுதியின் கற்பக தருக்களான பெருமளவிலான பனை மரங்கள் பற்றி எரிந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.