நாடு முழுவதும் 10,166 பாலியல் நோயாளர்கள் சிகிக்சை நிலையங்களில்
பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 41 நிலையங்களில் பல்வேறு வகையான பாலியல் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள 10,166 பேர் சிகிக்சைப் பெறுகிறார்கள்.
பாலியல் நோய்களுக்கான மருந்து போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சிகிச்சை மையங்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் நாடளவிய ரீதியில் 41 நிலையங்களில் அமைக்கப்பெற்றுள்ளன.
இவற்றின் ஊடாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4771 பேரும், சிப்லிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1469 பேரும், கொனோரியா நோயால் பாதிக்கப்பட்ட 1035 பேரும், ஹெர்பிஸ் 2891 பேரும் சிகிச்சை அல்லது சேவைகளைப் பெறுகிறார்கள். பாலியல் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2025.11.06 ஆம் திகதி முதல் நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2025.12.31 ஆம் திகதி தரவுகளின்படி எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் மருந்தின் கையிருப்பு 36420 ஆக காணப்படுகிறது. இந்த கையிருப்பு நான்கு மாதங்களுக்கு போதுமானதாகும். உலகளாவிய நிதியம், இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கம் ஆகிய தரப்பினரிடமிருந்து இந்த மருந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
தற்போது உலகளாவிய நிதியத்தாலும், எதிர்காலத்தில் அரசாங்க நிதியத்தாலும் இந்த மருந்துக்காக நிதியளிக்கப்படுகிறது. அவசர தேவைக்காக இந்த மருந்து சமீபத்தில் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து பெறப்பட்டது.
எய்ட்ஸ் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகளை தொடர்ந்து வழங்குவதற்கு சுகாதார மற்றும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் மருத்துவ விநியோக பிரிவுக்கு பொறுப்பு காணப்படுகிறது.
தற்போது எய்ட்ஸ் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றார்.