கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டுப் பெண்களின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவு
கொள்ளுப்பிட்டியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது திடீர் சுகவீனமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இரு வெளிநாட்டுப் பெண்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்ததன் பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 27 வயதுடைய ஜேர்மனிய பெண்ணின் உடலை, பிரேதப் பரிசோதனையின் பின்னர் ஜேர்மனிக்கு அனுப்பிவைக்குமாறு குறித்த பெண்ணின் தாயார் கொழும்பிலுள்ள அந்த நாட்டின் தூதரகம் ஊடாக தமக்கு அறிவித்ததாக காவல்துறையினர் மன்றுரைத்தனர்.
அதேநேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த 24 வயதுடைய பிரித்தானியப் பெண்ணின் தாயார், அவரது உடலைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வந்துள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, உயிரிழந்த இரண்டு பெண்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு காவல்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நீதவான் அதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள விடுதியொன்றில் ஒரே அறையில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணொருவரும் ஜேர்மனிய தம்பதியினரும் கடந்த 31 ஆம் திகதி திடீர் சுகவீனத்துக்கு உள்ளாகினர்.
குறித்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் இரண்டு பெண்களும் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த ஜேர்மனிய பெண்ணின் கணவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.