நடுவீதியில் ஆளும் எதிர்தரப்பு மோதல்! மூவர் மருத்துவமனையில்
நாவலப்பிட்டிய ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்படும் நடைபாதை தொடர்பில் இன்று (12) கண்காணிப்பதற்காக வருகைத் தந்த எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நடைபாதை 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதனைப் பார்வையிடுவதற்காக நாவலப்பிட்டி நகரசபையின் முன்னாள் தவிசாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஷசங்க சம்பத், நாவலப்பிட்டி நகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் இன்று சென்றுள்ளனர்.
இதன்போது மைதானத்துக்குள் உள்நுழையும் பிரதான வாயில் நகரசபையினரால் பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் மைதானத்துக்கு அருகில் காத்திருந்தனர்.
அப்போது நாவலப்பிட்டி நகரசபையின் தற்போதைய தவிசாளர் அமல் பிரியங்கர உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கலகத்தை அடக்க நாவலப்பிட்டி பொலிஸார் வருகைத் தந்த பின்னரும் கூட இருதரப்பின் அடிதடி தொடர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இருதரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தத்து.
