நாட்டில் கடும் மழை; மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் மூன்று அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் குறித்த நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.