சமந்தாவின் பாடலை கடுமையாக விமர்சனம் செய்த பிரபல பாடகி!
பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
புஷ்பா- பாடலுக்கு சமந்தா நடனம்
ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார். அந்தப் பாடலும் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடினார். அதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் பாடலில் சமந்தாவின் கவர்ச்சி இருந்தது.
தமிழில் நடிகை ஆண்ட்ரியா பாடலை பாட, பாடலாசிரியர் விவேகா எழுதியிருந்தார். புஷ்பா படம் எந்த அளவுக்கு ஹிட்டானதோ அதே அளவு இந்தப் பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் மூத்த பின்னணி பாடகியான எல்.ஆர். ஈஸ்வரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஊ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,
அதெல்லாம் ஒரு பாடலா?
"புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை சமீபத்தில் கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? தொடக்கத்தில் இருந்து கடைசிவரை ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது.
இசையமைப்பாளர் இதையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். பாடகர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. இசையமைப்பாளர் சொல்லும்படி அவர்கள் பாடவும் செய்துவிடுவார்கள். அந்தப் பாடல் என்னிடம் வந்திருந்தால் அதற்குரிய கலரே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
நாங்கள் மிகவும் சின்சியராக வேலை செய்தோம். அதனால்தான் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது" என்றார்.
பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் இடம்பெற்றிருந்த கலாசலா பாடலை டி.ஆருடன் இணைந்து பாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.