இறக்குமதியான இந்திய மயக்க மருந்தில் ஒரு இலட்சம் தரமற்றவை
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய மயக்க மருந்தில் ஒரு இலட்சம் மயக்க மருந்து குப்பிகள் தரமற்ற நிலைமைகள் காரணமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து இந்திய நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அவை பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மருந்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு
இறக்குமதி செய்யப்பட்ட இந்த் மருந்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே சுகாதார அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி மருந்தை வாங்கியவர்களிடம் இழப்பை வசூலிக்க வேண்டும் என்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
அதேவேளை இந்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்து அல்ல என்பதை மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தற்போது உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு நோயாளிகள் பயன்படுத்தும் வரை அதிகாரிகளுக்கு இது பற்றி தெரியாமல் இருப்பதுதான் பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்வரும் 16ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
500 மில்லியன் ரூபா நிதி மோசடி
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொள்வனவு செய்யும் போது 500 மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அதற்கான டெண்டர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த மருந்து கொள்வனவு செய்வதற்கான திட்டமிடலின் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதால், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.