ஞானசாரவின் காலில் விழுங்கள் " அரசின் கோரிக்கைக்கு பணிந்தாரா முஷாரப்?
ஒரே நாடு, ஒரே நீதி " செயலணியின் தலைவராக ஞானசார தேரர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
இச் செயலணி, குறிப்பாக முஸ்லிம்களை குறி வைத்த ஒன்றாகும். இதற்கு அல்லாஹ்வை மிக கேவலமாக நிந்தித்த ஞானசார தேரரையே தலைவராக நியமித்தமை, ஜனாதிபதியின் முஸ்லிம்கள் மீதான பழிவாங்கலுக்கான பிள்ளையார் சுழியாகவே நோக்க முடிகிறது.
இந் நியமனத்தை பேரினத்தை சேர்ந்த பலரே எதிர்த்திருந்தனர். இதனை பேரினத்தை சேர்ந்தவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை. இவ்வாறிருக்க, எம்மவர்களே அவரை உச்ச அளவில் தூக்கி பிடிப்பதை அவதானிக்க முடிகிறது.
அதிலும் குறிப்பாக சுன்னத் ஜமாதினர் பாரிய அங்கீகாரத்தை வழங்கியிருந்தமை கவலையான செயலாகும். இந் நிலையில் அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரபும் கலந்துரையாடி, மக்கள் பிரதிநிதி அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார்.
இந் நியமனத்தை ஆரம்பத்தில் பா.உறுப்பினர் முஷாரப் எதிர்த்திருந்தார். தற்போதைய சந்திப்பினூடாக அவரது நியமனத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
" எமது பக்க நியாயங்களை வழங்கி, ஞானசாரவை நடுநிலைப்படுத்துவது " போன்ற நியாயங்களை முஷர்ரப் சார்பு அணியினரிடம் அவதானிக்க முடிகிறது.
இந்த நியாயத்தை, எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சொல்ல வருகிறார்கள் என தெரியவில்லை. இவரை நியமித்தது யார்? பா.உறுப்பினர் முஷர்ரப், எந்த அரசை பாதுகாக்க, கடைக்கு செல்கிறாரோ, அந்த அரசின் தலைவரே, இவரை குறித்த செயலணிக்கான தலைவராக நியமித்துள்ளார்.
அப்படியானால், இவர் அரசுக்கு கடைக்கு சென்றதால் கிடைத்த இலாபம் தான் என்ன? தான் ஆதரிக்கும் அரசின் நியமனத்தை எவ்வாறு மறுக்க இயலும். இந் நியமனத்தை விரும்பியோ, விரும்பாமலோ பா.உ முஷர்ரப் ஏற்றேயாக வேண்டும்.
வேறு வழியில்லை, அவரிடம் எமது நிலையை பேசத் தானே வேண்டும் எனலாம். அல்லாஹ்வையே நிந்தித்த ஞானசாரரின் காலடிக்கு சென்று, முஸ்லிம்கள், தங்களது பிரச்சினையை சொல்லும் நிலைக்கு, எம்மை இவ்வரசு இக்கட்டில் தள்ளியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் கூற வருகிறாரா?
அல்லாஹ்வை நிந்தித்தாலும் பறவாயில்லையென, அவரை நாம் சந்தித்து, எமது பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினால், நாம் அல்லாஹ் மீது கொண்டிருக்கும் அன்பின் எல்லை தான் என்ன? அல்லாஹ்வை விட இவ்வுலக வாழ்வு பெரிதாக தெரிகிறதா?
அல்லாஹ் மீதான இழி நிந்தனையை சகித்து, அற்ப உலக விடயங்களை சாதிக்கத் தான் வேண்டுமா? ஞானசார தேரரிடம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முஹுது மஹா விஹாரை பற்றி பேசியதாக சில செய்திகள் வெளி வந்திருந்தன.
எத்தனையோ வகை வகையான முட்டுக்களை தற்போதைய அரசுக்கு கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரபுக்கு, தனது ஊரின் முஹுது மஹா விகாரை பிரச்சினையை தீர்க்க ஞானசார தேரரின் காலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியானால், நீங்கள் ஏச்சு பேச்சு வாங்கி, வழங்கும் முட்டின் பெறுமானமென்ன? நீங்கள் வழங்கும் முட்டினூடாக சாதித்தது, சாதிப்பது தான் என்ன? இதுவே இவர்களது இன்றைய நிலை. அரசின் உயர் தலைவர்களோ, அரசோ இவர்களை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை அறிய இதுவே போதுமான சான்றாகும்.
அற்ப இலாபங்களுக்காக இவ்வரசை கட்டிப் பிடித்து கொண்டிருக்கின்றனர். அவ்வளவு தான். அற்ப உலக விடயங்களுக்காக, அல்லாஹ்வை இழிவாக நிந்தித்தவரோடு உறவு பாராட்டுவது எவ் விதத்திலும் நியாயமானதாக தெரியவில்லை. என முகநூலில் சம்மாந்துறை துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் என்பவர் குறித்த பதிவை பதிவிட்டுள்ளார்.