வானூர்தி சேவைகள் ரத்து ; ஓமான் எயார் நிறுவனம் அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதைக் கருத்திற் கொண்டு, ஒன்பது முக்கிய நகரங்களுக்கான தனது வானூர்தி சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஓமான் எயார் (Oman Air) நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் மார்ச் 9 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், வானூர்திகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமான் எயார் நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, பின்வரும் நகரங்களுக்கான வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன:
மத்திய கிழக்கில் அம்மான், துபாய், பஹ்ரைன், தோஹா, தம்மாம், குவைத், பாக்தாத் ஆகிய நகரங்களுக்கும்
ஐரோப்பாவில் கோபன்ஹேகனுக்கும் உள்நாட்டில் காசாப் நகருக்கும் இடையிலான வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு ஓமான் எயார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், பயணிகள் மேலதிக விபரங்களுக்கு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.