திருமணமான பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கேட்ட ஓ.ஐ.சி !
திருமணமான பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மஹோ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஏ.எம். அசித்த கோமி அலககோன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் சந்தேக நபரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். மஹோ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பதவியில் இருந்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை
2013 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பெண்ணொருவருடன் பாலியல் ரீதியான தொடர்புகளுக்கு முயன்றது மற்றும் டிசம்பர் 26 ஆம் திகதி பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு எதிராளிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் மூலம் அவர் லஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, முறைப்பாட்டாளரான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, எதிராளிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்து அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் சார்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் அனுஷா சம்பந்தம்பெரும, சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், வழக்கறிஞர் தர்ஷன குருப்பு பிரதிவாதி சார்பில் வாதாடியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.