100 ரூபாய் வாங்கிய அதிகாரி அதிரடி கைது
பேருந்து பயண நேரத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதற்காக 100 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கம்பஹா பிராந்திய வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று (20) ரத்தோலுகம பேருந்து நிலையத்திலுள்ள நேரக் கண்காணிப்பாளர் அறையில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.

ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் 188ஆம் இலக்க வழித்தடப் பேருந்தின் பயணத்தைத் தாமதமாக ஆரம்பிக்கவும், அதற்குச் சாதகமான நேரத்தில் சேவையைத் தொடங்க அனுமதிக்கவும் பேருந்து ஊழியர் ஒருவரிடம் குறித்த அதிகாரி பணத்தைக் கோரிப் பெற்றதாக விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அதிகாரி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.