எறும்பு சட்னியில் இத்தனை நன்மையா; தர சான்றிதழ் வழங்கிய அரசாங்கம்!
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பழங்குடி மக்கள் தயாரிக்கும் செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒடிசாவில் வாழும் மயூர்பஞ்ச் பழங்குடியினர் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பசியை அதிகரிக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும், மூட்டுவலி, வயிற்று நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ’கை’ எறும்புச் சட்னி அல்லது சூப் சாப்பிடுவதாக கூறப்படுகின்றமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை செவ்வெறும்பு காணப்படுகிறது.
Oecophylla smaragdina
’Oecophylla smaragdina’ எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு கூடு நெய்து, தன் குஞ்சுகளை அதில் வளர்க்கிறது. இந்த மலையில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும், இதை அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர்.
இலையாலான கூட்டை எடுத்து தண்ணீரில் போட்டு இலைகளை தனியே பிரித்துவிட்டு எறும்புகளை, இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பை வைத்து அரைத்து துவையல் செய்கின்றனர்.
எறும்பின் குஞ்சுகளையும் இம்மக்கள் பெரிதும் விரும்பி உண்கின்றனர். ‘கை’ எறும்பு துவையலில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஸிங்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
எறும்புச் சட்னி அல்லது சூப்
மயூர்பஞ்ச் பழங்குடியினர் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும், பசியை அதிகரிக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும், மூட்டுவலி, வயிற்று நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ’கை’ எறும்புச் சட்னி அல்லது சூப் சாப்பிடுகின்றனர்.
இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என ஒடிசா அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.