புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டவர்கள் அவதானம்!
புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டவர்களே , எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதாக முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிய சம்பவங்கள் இன்று வரை மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதலில் கந்தரோடை அதன் பின்னர் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து கடந்த வார இறுதியில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக குறித்த நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன்.
அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடம் இந்த விடயங்களை அதாவது எரிவாயு அடுப்பு வெடித்தல் சம்பவங்களை அப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் ஊடாக விசாரணை செய்து சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து எமது பாவனையாளர் அதிகார சபையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்தல் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த விடயமானது தேசிய மட்டத்தில் இடம்பெற்றுவரும் ஒரு சம்பவமாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் எச்சரிக்கையாக விடயத்தை கையாள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.